ரொம்ப வருஷங்களாக எனக்குள் ஓர் ஆசை - தலையை மட்டும் வெளியில் நீட்டி பறக்கலாமா என்று யோசனை பண்ணிவிட்டு 'ம்ஹூம் வேண்டாம்' என்கிற தீர்மானத்துடன் மறுபடியும் பொந்துக்குள் தலையை இழுத்துக் கொள்ளும் கிளிக் குஞ்சு போல - ஓர் ஆசை.
ஆனால், சிறகுகள் துளித்துளியாக வளர்ந்து அந்தக் குஞ்சு திடுமென ஒருநாள் அழகான கிளியாகி பறக்க ஆரம்பித்துவிடும் தினுசில்தான், என்னுடைய அடிமனசு ஆசையும், படிப்படியாக உருப்பெற்று இன்று இந்தப் புத்தக வடிவில் வெளிப்பட்டிருக்கிறது.
சின்ன வயசில் வீட்டுக் குழந்தைகள் அத்தனை பேரும் சாயங்காலம் ஆனால் அம்மாவைச் சுற்றி உட்கார்ந்து விடுவோம். கற்சட்டி நிறைய வத்தல் குழம்பு, தயிர் சாதங்களைப் பிசைந்து வைத்துக் கொண்டு அம்மாவும் தினமும் ஒரு புதுக் கதையைச் சொல்லிக் கொண்டே நாங்கள் நீட்டும் கையில் சாதத்தை உருட்டிப் போடுவார். சட்டி சாதம் உள்ளே போவது கூட தெரியாது. கதை அத்தனை ஸ்வாரஸ்யமாக இருக்கும். எலிப்பெண் கதையைச் சொல்லும்போது உதடுகளைக் குவித்து எலி கத்துகிற மாதிரி 'ப்ச் ப்ச்' என்று ஓசைப்படுத்திக் கொண்டே கதையை விவரிப்பார். அம்மாவின் சாமர்த்தியமான வர்ணனையில் ராஜகுமாரியின் அழகும், காடுகளின் அடர்த்தியும், புலியின் கொடூரமும் கண்முன் தத்ரூபமாய் நிற்கும். கதைக் கதாபாத்திரங்கள் அழுதால் நாங்களும் அழுது, சிரித்தால் சிரித்து, அவர்களுக்குக் கடவுள் வரம் கொடுத்தால் எங்களுக்கே தந்த மாதிரி கையைத்தட்டி பரவசப்பட்ட அற்புதமான நாட்கள் அவை!
அந்த சிலிர்ப்பூட்டும் அனுபவங்கள் இன்றைய குழந்தைகளுக்குக் கிடைக்கின்றனவா என்கிற கேள்வி என்னுள் எழுந்தபோது, இல்லை, நிச்சயமாய் இல்லை என்ற பதில் கிட்ட, அப்போதுதான் இது குறித்து நாம் ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆசை பிறந